வெள்ளி, 30 ஜூலை, 2010

விடுதலை நாளிதழ்

நான் இங்கு ஜெர்மனி வந்த பிறகு, தினமும் கணிணியில் படிக்கும் இதழ்களில் விடுதலை (http://www.viduthalai.periyar.org.in) மாலை இதழும் ஒன்று. இது திராவிட கழகத்தின் அதிகார பூர்வ ஏடு. இந்த இதழ் பெரியார் அவர்களால் ஈரோட்டில் ஆரம்பிக்கப்பட்டது. 1939ல் இந்த நாளிதழ் துவக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். 1962 முதல் கி.வீரமணி அவர்கள் இந்த இதழின் ஆசிரியராக இன்றுவரை இருந்து வருகிறார்.

இன்று இந்த இதழும், ஒரு வகையில் கலைஞர் மற்றும் தி.மு.கவின் புகழ் பாடிதான். ஆனால் பல வகைகளில், இந்த இதழ் வித்தியாசமானது. வெறும் அரசியல் செய்திகள் மட்டுமல்ல, அதையும் தாண்டி சமூகம், அறிவியல், பகுத்தறிவு, வரலாறு என்று விரியும்.

குறிப்பாக அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், அடிப்படை கேள்விகள் என்று கட்டுரைகள் இருக்கும். உதாரணமாக, இன்றைய இதழில் கூட, ரத்தம் சிவப்பாக இருப்பது ஏன்?, விண்கற்கள் பற்றியும் கட்டுரைகள் உண்டு (http://www.viduthalai.periyar.org.in/20100729/news25.html). பல நேரங்களில், அறிவியலை பயன்படுத்தி கடவுள் நம்பிக்கையை கேலி செய்வார்கள். விண்வெளியில் நுண்ணுயிரிகள் வாழ்வதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததை, “கடவுள்கள் வாழ்வதாக சொல்லுமிடத்தில் பாக்டீரியாக்கள் வாழ்கின்றனவாம்” என்று வெளியிடுவார்கள். ஆம்ஸ்டாங் நிலவில் கால் வைத்தபோது, அதை பெரிதாக தமிழகத்தில் பரப்பியது இந்த ஏடு தான் என்று கேள்விப்பட்டேன். நிலவுக்கு சந்திராயன் அனுப்பிய விஞ்ஞானி மயில்சாமி அவர்கள் திருப்பதி சென்று வழிப்பட்டதை கேலி செய்வார்கள்.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தினமும் கட்டுரைகள் இருக்கும். கோவில் நகைகள் கொள்ளை போகும்போது, `தன் நகைகளையே காக்க இயலாத சாமி, மக்களை காக்க போகிறதாம்’ என்று தலைப்பு செய்தி போடுவார்கள். மேலும் இந்த இதழில், ஆன்மீகம், போலி சாமியார்கள், கடவுள்களை கிண்டல் செய்வது என்று பெரியார் தோணில் எல்லாம் இருக்கும். இந்து கடவுள்கள் மட்டுமல்ல, பிற சமயக் கடவுள்களையும் விட்டு வைப்பதில்லை. நம்ப ஊர் சாமியார் முதல் இத்தாலி பாதிரியார்வரை எல்லோரது லீலைகளும் இருக்கும். எனக்கு பல நேரங்களில் போலி சாமியார்கள் எங்கு கிடைப்பார்கள், என்று தேடுவார்களோ என்று தோன்றியுள்ளது. கேலி சித்திரங்களும் பகுத்தறிவை தூண்டும் வகையில் அமைந்திருக்கும்.

இதையெல்லாம் விட, எனக்கு மிகவும் பிடித்தது வரலாற்று எழுத்துக்கள்தான். தினமும் பெரியார் பல்வேறு பிரச்சனைகளின்போது எழுதிய கட்டுரைகள் வெளியிடப்படும். மேலும், காமராசர், அண்ணா, சுத்தானந்த பாரதியார், மு.வ, பாரதிசாசன், முத்துலட்சுமி போன்றவர்கள் குறித்தும், அவர்களின் சுமூக பங்களிப்பு குறித்தும் எடுத்து கூறுவார்கள்.

சில, பல நேரங்களில் இந்து கடவுள்களையும், பார்ப்பனர்களையும் கடுமையாக தாக்கியிருப்பார்கள். இது சிலரின் மனதை புண்படுத்தலாம். இதை தவிர்த்துவிட்டு பார்த்தால், உண்மையிலே, விடுதலை இதழ் ஒர் அறிவு பெட்டகம்தான்.

1 கருத்து:

  1. If u don't believe in god it's ok but u should not hurt others believes which this news paper does..... Even our CM always comment only about Hindu god's did u ever heard any statement form him about Christians or Muslims if he criticize them he will lose his post....becoz he is surviving becoz of minority votes. At last only Hindus has becom eelucha vaiiii.i would say true love is God, so god exists in every human begin

    பதிலளிநீக்கு