வியாழன், 22 ஜூலை, 2010

தேவை முழு மதுவிலக்கு


-->

 
-->
--> இங்கு எழுத்தாளர் ஞானி அவர்களின், இரண்டு கவலைகளை என்னும் தலைப்பில் குமுதத்தில் வெளியான `ஓ பக்கங்கள்` பகுதியிலிருந்து பாதியை எனது கருத்துக்களுக்கு பிறகு கொடுத்துள்ளேன். அதில் ஞானி அவர்கள் தமிழகத்தில் சிறுவர்களின் மது பழக்கம் குறித்தும், இந்த அரசின் அக்கறையின்மை குறித்தும், மேலை நாடுகளில் மது பழக்கம் குறித்தும் விவரித்துள்ளார்.


மற்றோரு செய்தியை நான் இங்கு பதிவு செய்ய விருப்புவது, பீர் குடித்தால் குண்டாகலாம், வைன் குடித்தால் உடல் பருமன் குறையும், மேனி பலப்பலக்கும் போன்ற காரணங்களால் பலர் மது அருந்துவதை பார்த்துள்ளேன். என்னிடம் கூட பலர் தினமும் ஒர் பீர் குடி, உடம்பு குண்டாகிவிடும் என்று இந்தியாவிலும் கூறியுள்ளனர், இங்கு ஜெர்மனிலும் கூறியுள்ளனர். எனக்கு வியப்பாக உள்ளது உடல் எடையை குறைக்கவும், ஏற்றவும் ஆயிரம் வழிகள் இருக்கும் போது, ஏன் அவர்கள் மதுவை தேர்வு செய்ய வேண்டும் என்பது. 

சுகந்திர இந்தியாவில், தமிழகத்தில் 1973 வரை முழு மது விலக்கு இருந்துள்ளது. பலர் வாதம் செய்யலாம், மது விலக்கினால் கள்ளச்சாரயம், விஷ சாரய நிகழ்வுகள் பெருகுமென்று, ஆனால் அதனால் பாதிக்கபடுவோர் எண்ணிக்கை பத்தில் ஒர் பங்கு கூட இருக்காது என்பது, என் கணிப்பு. குறிப்பாக இளம் சிறார்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், நகரத்தில் வாழ்வோர்களுக்கு சாரயத்திற்கான வாய்ப்பும் மிக குறைவாகதான் இருக்கும்.


இன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள், அண்ணா மறைந்தபோது எழுதிய கவிதாஞ்சலியிருந்து, சில வரிகளை நினைவு கூற விரும்புகிறேன். “ஆந்திரத்து பிரும்மானந்த ரெட்டிகாரும், ஆஹா! நீதானே (அண்ணாவை) அசல் காந்தியவாதி என்று ஆராதனை செய்திட்டார். மது விலக்கை தீவரமாய் ஆக்குகின்றீர், பல மாநிலத்தில் கை கழுவி கயலம் கட்டிவிட்டார் மரங்களிலே, என்று கிரி (முன்னாள் குடியரசு தலைவர்) என்றால் மலையன்றோ அந்த மலை தழுவும் முகிலானார் நம் அண்ணா”. ஆனால் கலைஞரோ தான் புகழ்ச்சியுடனும், பெருமையுடனும் கூறிய தன் அரசியல் ஆசானின் கொள்கையை கூட மறந்துவிட்டார். கல்விநிறுவங்களின் அருகில் மது கடைகள் கூடாது என்பது சட்டம். ஆனால் இம்முறை தமிழகம் சென்றபோது, எம் காமராசர் பல்கலைக்கழகம் அருகில் 4 டாஸ்மாக் கடைகள் முளைத்திருந்தன. அவையாமும் ஒரு கிலோமீட்டர்க்கும் குறைவான தூரத்திற்குள் இருந்தன. அங்கு பல் சிறார்கள் வேலை செய்வதையும் கண்டு வேதனையுற்றேன். சில மாதங்களுக்கு முன்பு, திணமணியில் ஒரு செய்தி – தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துகளில் 50% மேல் மது அருந்தியவர்களால் என்பது என்னை வியக்க செய்தது. ஆனால் இந்த அரசோ, மது கடைகளை கூட்டி கொண்டே செல்கிறது. 

ஞானி அவர்கள் அமெரிக்காவில் கூறியுள்ளதைபோல், இங்கு ஜெர்மனியில் கண்டதை பதிவு செய்கிறேன். பார்ட்டிகளில் அனைவரும் மது அருந்தினாலும், கார்களில் வந்துள்ளோர், நான் காரை ஓட்டி செல்ல வேண்டும், ஆகையால் ஒரு கோப்பையுடன் நான் நிறுத்திகொள்கிறேன் என்று கூறுவர்.

இத்தகைய மனநிலை நமது மக்களுக்கு இல்லை. எனவே, நாம் இருப்புகரம் கொண்டு 
மது விலக்கை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.

---
ஞானி அவர்களின் கட்டுரை,



சென்னை நகரத்தில் சிறுவர்கள் மது அடிமைகளாக மாறிவருவதைப் பற்றியது. ஒரே ஒரு அரசு மருத்துவமனையில் மட்டும் மாதந்தோறும் ஐந்து சிறுவர்களாவது மதுப் பழக்கத்திலிருந்து  மீட்புச் சிகிச்சைக்காக வருகிறார்களாம். இவர்களின் சராசரி வயது பத்து ! சில மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்கள் மது ஏக்கத்தில் சுவரேறி குதித்து மருத்துவனையிலிருந்து தப்பித்துச் செல்லும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் எல்லாரும் எப்போதும் குடித்துவிட்டு கும்மாளம் போடுவது போன்ற ஒரு தப்பான் கருத்தை தமிழ் மீடியா, சினிமா எல்லாம் நீண்ட காலமாகவே நம்மிடையே பரப்பி வந்திருக்கின்றன. என் 20 நாள் அமெரிக்கப் பயணத்தில் ஒரு இடத்திலும் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் எவரையும் பார்க்கவில்லை. சென்னை திருப்பியதும் விமான நிலையத்திலிருந்து வீடு போய் சேரும் முன்பாக குறைந்தது நாலு இடத்திலாவது டாஸ்மாக் கடை வாசலில் தெருவில் புறண்டு கொண்டிருப்பவர்களை நிச்சயம் தவறாமல் பார்ப்பேன். சுய நினைவற்ற் இந்த தமிழ்ர்கள் கொடுக்கும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயிதான் நாம் இலவச டிவி வழங்கி அறிவையும், மாநாடு நட்த்தி நம் மொழியையும் வளந்த்துக் கொண்டிருக்கிறோம். செம்மொழி மாநாடு நடந்த நான்கு நாட்களில் கோவையில் அங்கே மது விற்பனை வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது. இதற்காக் ஒரு பாராட்டு விழா நடத்த கூட நாம் தயங்கவுமம், கூச்சபடவுமம் மாட்டோம் என்ற மன நிலைக்கு இன்றைய தமிழ் சமுகம் தாழ்ந்திருக்கிறது.

அமெரிக்காவில் சிறுவர்கள் குடிக்க முடியாது. கடைக்குப் போய் மதுபாட்டில்களை வாங்கவும் முடியாது. 21 வயது நிரம்பாதவர்களுக்கு சிகரெட்டோ மதுவோ விற்பதே சட்டப்படிகுற்றம். பாரில் அளவுக்குமேல் குடித்திருப்பவரிடம் கார் சாவியைப் பறிமுதல் செய்யும் உரிமை பார் நடத்துபருக்கு உள்ளது. போதையில் வண்டி ஓட்டி ஒருவர் சிக்கினால், அவருக்குமது ஊற்றிக் கொடுத்து கார் சாவியை பறிமுதல் செய்யத் தவறிய பார்காரர் மீதும் நடவடிக்கை உண்டு.நாமோ நம் சிறுவர்களைக் குடிகாரர்களகவும், மதுக்கடை பணியாளர்களாகவும் ஆக்கி வைத்திருக்கிறோம்.

நம்முடைய பள்ளி ஆசிரியர்கள் முதல் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் வரை இண்டெலக்சுவல்கள் என்று சொல்லப்படும் அறிவால் பிழைப்பு நடத்தும் அறிஞர் கூட்டத்துக்கு  தமிழ்ச் சிறுவர்கள் போதைக்குள் தள்ளப்படுவதைப் பற்றித் துளியும் அக்கறை கிடையாது. இவர்கள் வாயைத் திறப்பதே பட்டி மன்றங்கள், கவியரங்கங்கள், பாராட்டு விழாக்களில்  துதி பாடவும் சம்பள உயர்வு, இடமாற்றம், பதவி உயர்வு போன்ற ‘சமூகப் பிரச்சினை’களில் மட்டும்தான். மற்ற விஷயங்களில் வாயை கோந்து போட்டு ஒட்டிவைத்துக் கொண்டு விடுவார்கள்.

அமெரிக்காவில் ஒரு பாப் இசைப் பாடகன் ஜனாதிபதி மாளிகை விருந்துக்கு சென்றால் கூட,  “பரவாயில்லையே, இந்த ஜனாதிபதிக்கு வெள்ளை மாளிகையில் எங்கே நூலகம் இருக்கிறதென்று தெரிந்திருக்கிறதே.” என்று கிண்டல் அடிக்கும் துணிவுடன் இருக்கிறார்கள்.  நம் ஊரிலோ, ஒவ்வொரு வாரமும் இந்தக் கட்டுரை அச்சாகுமா என்ற கவலையுடனே எழுதியாக வேண்டிய நிலைதான் இருக்கிறது.

கலைஞர் கருணாநிதிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு என் பணிவான வேண்டுகோள். தயவுசெய்து நம் சிறுவர்களின் எதிர்காலத்துடன் விளையாடாதீர்கள். மதுக்கடைகளை மூடுவதுதான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததை விட தமிழர்களுக்கு செய்யும்பேருதவியாக இருக்கும் - ஞானி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக