வெள்ளி, 30 ஜூலை, 2010

விடுதலை நாளிதழ்

நான் இங்கு ஜெர்மனி வந்த பிறகு, தினமும் கணிணியில் படிக்கும் இதழ்களில் விடுதலை (http://www.viduthalai.periyar.org.in) மாலை இதழும் ஒன்று. இது திராவிட கழகத்தின் அதிகார பூர்வ ஏடு. இந்த இதழ் பெரியார் அவர்களால் ஈரோட்டில் ஆரம்பிக்கப்பட்டது. 1939ல் இந்த நாளிதழ் துவக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். 1962 முதல் கி.வீரமணி அவர்கள் இந்த இதழின் ஆசிரியராக இன்றுவரை இருந்து வருகிறார்.

இன்று இந்த இதழும், ஒரு வகையில் கலைஞர் மற்றும் தி.மு.கவின் புகழ் பாடிதான். ஆனால் பல வகைகளில், இந்த இதழ் வித்தியாசமானது. வெறும் அரசியல் செய்திகள் மட்டுமல்ல, அதையும் தாண்டி சமூகம், அறிவியல், பகுத்தறிவு, வரலாறு என்று விரியும்.

குறிப்பாக அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், அடிப்படை கேள்விகள் என்று கட்டுரைகள் இருக்கும். உதாரணமாக, இன்றைய இதழில் கூட, ரத்தம் சிவப்பாக இருப்பது ஏன்?, விண்கற்கள் பற்றியும் கட்டுரைகள் உண்டு (http://www.viduthalai.periyar.org.in/20100729/news25.html). பல நேரங்களில், அறிவியலை பயன்படுத்தி கடவுள் நம்பிக்கையை கேலி செய்வார்கள். விண்வெளியில் நுண்ணுயிரிகள் வாழ்வதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததை, “கடவுள்கள் வாழ்வதாக சொல்லுமிடத்தில் பாக்டீரியாக்கள் வாழ்கின்றனவாம்” என்று வெளியிடுவார்கள். ஆம்ஸ்டாங் நிலவில் கால் வைத்தபோது, அதை பெரிதாக தமிழகத்தில் பரப்பியது இந்த ஏடு தான் என்று கேள்விப்பட்டேன். நிலவுக்கு சந்திராயன் அனுப்பிய விஞ்ஞானி மயில்சாமி அவர்கள் திருப்பதி சென்று வழிப்பட்டதை கேலி செய்வார்கள்.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தினமும் கட்டுரைகள் இருக்கும். கோவில் நகைகள் கொள்ளை போகும்போது, `தன் நகைகளையே காக்க இயலாத சாமி, மக்களை காக்க போகிறதாம்’ என்று தலைப்பு செய்தி போடுவார்கள். மேலும் இந்த இதழில், ஆன்மீகம், போலி சாமியார்கள், கடவுள்களை கிண்டல் செய்வது என்று பெரியார் தோணில் எல்லாம் இருக்கும். இந்து கடவுள்கள் மட்டுமல்ல, பிற சமயக் கடவுள்களையும் விட்டு வைப்பதில்லை. நம்ப ஊர் சாமியார் முதல் இத்தாலி பாதிரியார்வரை எல்லோரது லீலைகளும் இருக்கும். எனக்கு பல நேரங்களில் போலி சாமியார்கள் எங்கு கிடைப்பார்கள், என்று தேடுவார்களோ என்று தோன்றியுள்ளது. கேலி சித்திரங்களும் பகுத்தறிவை தூண்டும் வகையில் அமைந்திருக்கும்.

இதையெல்லாம் விட, எனக்கு மிகவும் பிடித்தது வரலாற்று எழுத்துக்கள்தான். தினமும் பெரியார் பல்வேறு பிரச்சனைகளின்போது எழுதிய கட்டுரைகள் வெளியிடப்படும். மேலும், காமராசர், அண்ணா, சுத்தானந்த பாரதியார், மு.வ, பாரதிசாசன், முத்துலட்சுமி போன்றவர்கள் குறித்தும், அவர்களின் சுமூக பங்களிப்பு குறித்தும் எடுத்து கூறுவார்கள்.

சில, பல நேரங்களில் இந்து கடவுள்களையும், பார்ப்பனர்களையும் கடுமையாக தாக்கியிருப்பார்கள். இது சிலரின் மனதை புண்படுத்தலாம். இதை தவிர்த்துவிட்டு பார்த்தால், உண்மையிலே, விடுதலை இதழ் ஒர் அறிவு பெட்டகம்தான்.

புதன், 28 ஜூலை, 2010

தமிழ் எண்கள் Tamil numerals

எனக்கு நன்றாக ஞாபகமுள்ளது, சிறு வயதில் எட்டாவதோ, ஒன்பதாவதோ படிக்கும்போது ஒவ்வொரு மொழியிலும் எழுத்துக்கள் எல்லாம் வெவ்வேறு வடிவத்துடன் உள்ளது, ஆனால் எண்கள் மட்டும் எப்படி ஒரே மாதிரி உபயோகத்தில் உள்ளது என்று எண்ணி குழம்பியுள்ளேன். ஒரு மாதத்திற்கு முன்புதான், நமது தமிழ் மொழியில் எண்கள் உள்ளன என்பதை அறிந்து மிகப்பெரிய வியப்புற்றேன். பன்னிரெண்டு வருடம் பள்ளியிலும், இரண்டு வருடம் கல்லூரியிலும் தமிழ் பயின்றும், இதை ஏன் எந்த புத்தகத்திலும் குறிப்பிடவில்லை, ஏன் எந்த வாத்தியாரும் சொல்லவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.


சமஸ்கிருததிலும் இதை போலவே, எண்கள் உள்ளன. நாம் இன்று பயன்படுத்தும் எண்கள், இந்தோ-அரேபிய எண்கள் என்று வழங்கப்படுகின்றன. தமிழ், சமஸ்கிருதம் இரண்டுமேயின்றி எவ்வாறு இந்தோ- என்று அழைக்கப்படுகிறது என்று தெரியவில்லை. ஒரு வேளை, சுல்தான்களும், முகலாயளர்களும் பல நூற்றாண்டுகள் வட இந்தியாவை ஆண்டதால், இந்த பெயர் வந்திருக்கலாம்.


இந்தோ-அரேபியம்
0
1
2
3
4
5
6
7
8
9
10
100
1000
தமிழ்

சமஸ்கிருதம்




தமிழ் எண்களும், சமஸ்கிருத எண்களும், இந்தோ-அரேபிய எண்களுடன் ஒற்றுமையுள்ளதை கவனிக்கவும். தமிழில் சுழியம் (பூஜ்யம்) பயனில் இல்லை. அதை கண்டுப்பிடித்த பெருமை, வட இந்தியர்களுக்கே. 

எழுத்துக்கள் போலவே சில எண்கள் இருந்தாலும் (க-1, உ-2, ரு-5, எ-7, அ-8), இவ்வெழுத்துக்கள் யாவும் தனியே பொருள் தராது. ஆகையால் சொற்களிலின்றி தனியே சொற்களுக்கு இடையே இருக்கும்போது, அவை எண்கள் என தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக, அன்பழகன் கடைக்கு சென்று அ பழங்கள், ரு ரூபாய்க்கு வாங்கி வந்தான்.


எண்களை எழுதும் முறை:


11 என்று எழுத வேண்டும் எனில், 10+1 என்று எழுத வேண்டும். அதாவது ௰க என்று எழுதினால் பதினொன்று என்று பொருள்.


225 என்று எழுத 200+20+5, அதாவது உ௱உ௰௫ என்று எழுத வேண்டும்.


௲௪௰ = 1040
௲௯௱௮௰௫ = 1985
௮௲ = 8000
௭௰௲ = 70,000
௮௱௲௲௯௱௮௰௫ = 801985


எனக்கு இந்த எண்களை எழுதவும், புரிந்து கொள்ளவும் மிகவும் கடுமையாக உள்ளது. இந்தோ-அரேபிய எண்கள் முறைக்கு சிறு வயதிலிருந்தே பழகிவிட்டதாலும், இந்த எண்களை இதற்கு முன்பு கண்டதேயில்லை என்பதாலும் இந்த கடினம் என்று நினைக்கிறேன். உபயோகிக்க தொடங்கினால் எளிதாகவிடும்.


கீழே எண்களுக்கு உரிய தமிழ் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழில் மட்டும்தான் மகாயுகம் (1022) வரையிலும் சொல்லுவதற்கு சொற்கள் உண்டு எங்கோ கோள்விப்பட்ட ஞாபகம். ஆனால் ஆங்கிலத்தில் Centillion (10303 ) வரையிலும் உள்ளது. ஆனால் இவை கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் சேர்க்கப்பட்டது என்று அறிகிறேன்.



தமிழ் எண்
தமிழ் சொல்
ஆங்கில சொல்
1
ஒன்று
One
10
பத்து
Ten
100 (102)
நூறு
Hundred
1000 (103)
ஆயிரம்
Thousand
10000 (104)
௰௲
பத்தாயிரம்
Ten thousand
100000 (105)
௱௲
நூறாயிரம்
Hundred thousand
1000000 (106)
௲௲
பத்துநூறாயிரம்
Million
10000000 (107)
௰௲௲
கோடி
Ten million
100000000 (108)
௱௲௲
அற்புதம்
Hundred million
1000000000 (109)
௲௲௲
நிகற்புதம்
Billion
10000000000 (1010)
௰௲௲௲
கும்பம்
Ten billion
100000000000 (1011)
௱௲௲௲
கனம்
Hundred billion
1000000000000 (1012)
௲௲௲௲
கர்பம்
Trillion
10000000000000 (1013)
௰௲௲௲௲
நிகர்ப்பம்
Ten trillion
100000000000000 (1014)
௱௲௲௲௲
பதுமம்
Hundred trillion
1000000000000000 (1015)
௲௲௲௲௲
சங்கம்
Quadrillion
10000000000000000 (1016)
௰௲௲௲௲௲
வெல்லம்
Ten quadrillion
100000000000000000 (1017)
௱௲௲௲௲௲
அன்னியம்
Hundred quadrillion
100000000000000000 (1018)
௲௲௲௲௲௲
அர்த்தம்
Quintillion
1000000000000000000 (1019)
௰௲௲௲௲௲௲
பர்ரர்த்தம்
Ten quintillion
100000000000000000000 (1020)
௱௲௲௲௲௲௲
பூரியம்
Hundred quintillion
1000000000000000000000 (1021)
௲௲௲௲௲௲௲
முக்கோடி
Sextillion
10000000000000000000000 (1022)
௰௲௲௲௲௲௲௲
மகாயுகம்
Ten sextillion


1989 இந்திய வாகன சட்டப்படி, மாநில மொழிகளில் வாகன எண் பலகையை எழுதலாம். ஆனால் இதுவரை யாரும் வானக எண் பலகையில் தமிழ் எண்கள் உபயோகித்து நான் பார்த்தது இல்லை. தமிழ் உணர்வாளர்கள் சிலர், இந்த எண்களை நாம் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று வாதிடுகிறார்கள். இது உண்மையில் முடியாத காரியமாய் எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் கணிதத்திலும், காசு, பணத்திலும் இதை பயன்படுத்துவது இயலாது. ஏனினும், பள்ளிகளில் சிறு வயதிலேயே, இந்த எண்கள் முறை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். மேலும் தமிழ் புத்தங்களில், இந்த எண்கள் முறையை உபயோகிக்க வேண்டும்.


செவ்வாய், 27 ஜூலை, 2010

பி.டி கத்திரிக்காய் – ஒர் விழிப்புணர்வு நாடகம்

 
--> களம்: கிராமத்தில் வயக்காடு
கதை மாந்தர்கள்: விவசாயி மற்றும் ஆனந்த என்னும் ஆய்வு மாணவன் 
(கூடிய விரைவில், இந்த நாடகத்தின் ஒலி வடிவம் இங்கு இணைக்கப்படும்)

விவசாயி: வாப்பா ஆனந்துஎப்படியிருக்கிற?

ஆனந்த்: நல்லாயிருக்கேன், அண்ணே! நீங்க எப்படியிருக்கீங்க?

விவசாயி: ஏதோ போகுதுப்பா. ஆமாம் நீ ஏதோ செடியிலதான் ஆராய்ச்சி செய்றதா, அப்பா சொன்னாரு.

ஆனந்த்: ஆமாம், அண்ணே! செடியோட வேரும், மண்ணுல உள்ள சின்ன சின்ன பாக்டிரியா என்னும் நுண்ணுயிரிகளும் எப்படி உறவு கொள்ளுதுன்னு ஆராய்கிறேன்.

விவசாயி: அப்ப நீதான்பா, ஒரு சந்தேகத்த தீர்க்க  சரியான ஆளு.

ஆனந்த் : என்ன சந்தேகம் அண்ணே?

விவசாயி: தம்பி, இந்த பத்திரிகையில, ரேடியோ, டிவியில எல்லாம் கொஞ்ச நாளா, ஏதோ பிடி கத்திரிக்கான்னு சொல்றாங்க, அதுக்காக எதோ போராட்டமெல்லாம் நடத்துறாங்க, அமைச்சர்கள் ஏன் நம்ப முதலவர் கூட ஏதோ சொன்னாருஅது என்ன தம்பி?

ஆனந்த்: அண்ணே! பிடி கத்திரிக்காய்னு சொல்றது, ஒரு மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்கா ரகம்.

விவசாயி: அது என்னாபா மரபணு

ஆனந்த்: ஒவ்வொரு உயிரினத்தின் தன்மையை அதன் DNA என்னும் மரபணு தான் நிர்ணயிக்கிறது. உதாரணமாக, நம்ம தோல் கருப்பா, வெள்ளையா, மாநிறமா, மிருதுவா, தடிமனா இருப்பது போல், தென்னை மரங்களில் மிக உயரமாகவும் குள்ளமாகவும் உள்ளது போன்றவற்றை மரபணுவில் உள்ள தனித்தன்மைகள் தான் நிர்ணியக்கிறது. ஒவ்வொரு உயிரனத்துக்கும் அதற்கேன genome என்று கூறப்படும், தனி மரபணு தொகுப்பு உண்டு.

விவசாயி: அட பாருடா! அப்புறம்

ஆனந்த்: அதே மாதிரி, இந்த பயிர்களுக்கும் மரபணுவுண்டு. அதுல மாற்றம் செஞ்சதுதான் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். இந்த விஞ்ஞானிகள் என்ன செய்றாங்கன்னாஇப்ப இந்தா இங்க வளர்ற இந்த செடியால, உப்பு தண்ணியில வளர முடியுமா?.

விவசாயி: முடியாது.

ஆனந்த்: இதுக்காக கடலுல உப்பு தண்ணியில வளர கூடிய செடியிலிருந்து உப்புல வளர்றதுக்கான மரபணுவை எடுத்து, Biotechnology என்று சொல்கிற உயிரிதொழிற்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சாதரண செடியோட மரபணுவோட சேத்துவிடுவாங்க. அப்ப என்னவாகும்?

விவசாயி: அப்ப இந்த செடியும் உப்பு தண்ணில வளருமா?

ஆனந்த்: ஆமாமண்ணே, சரியா சொன்னீங்க! அது மட்டுமில்ல, இது மாதிரி குளிரில்ல, வெப்பத்துல வளர்கிற மாதிரி, அப்புறம் நிறைய மகசூல் தர மாதிரி, களை செடியெல்லாம் வளராத மாதிரி, எந்த வியாதியும் வராத மாதிரினு செடிகளில் பிற உயிரினங்களின் மரபணுவை இதுல மாத்தி செய்றாங்க. இத தான், மரபணு மாற்று தொழிற்நுட்பம் என்கிறார்கள். இததான் இங்லீஷில் Genetically modified, GM cropனு சொல்லாங்க.

விவசாயி: அப்பிடியா!

ஆனந்த்: தங்க அரிசி தெரியுமாண்ணே?

விவசாயி: அது என்னடா, தங்கத்தில செஞ்சதா?

ஆனந்த்: இல்லை அண்ணே! இந்த தங்க அரிசியும் ஒரு மரபணு மாற்றபட்ட ஒரு அரிசிதான். இதுல வைட்டமின்Aவிற்கான மரபணுவை அரிசியோட சேர்த்து வைச்சுடாங்க.

விவசாயி: அப்ப என்னவாகும்.

ஆனந்த்: பொதுவா நம்ப அரிசியில வெறும் மாவு சத்துதான் இருக்கும். இப்ப நம்ப கண் பார்வை மற்றும் உடம்புக்கு தேவையான வைட்டமினும், அரிசியில் இருக்கும்.

விவசாயி: இதுக்கு ஏன் தங்க அரிசின்னு பெரு வச்சாங்க?

ஆனந்த்: அண்ணே, கண்ணு நல்லா தெரிய என்ன சாப்பிட சொல்வாங்க?

விவசாயி: ம்ம்…. கேரட்டு

ஆனந்த்: சரியா சொன்னீங்க. ஏன்னா கேரட்டுல வைட்டமின்A அதிகம். இந்த அரிசியில அந்த மரபணுவை சேர்க்கும்போது, அதும் கேரட் மாதிரி ஆரஞ்சு-மஞ்சளா, தங்க நிறம்போல் ஆகிவிடும். அதனால தங்க அரிசி பேர் வைச்சுடாங்க.

விவசாயி: அப்ப வெறும் சோத்த வடிச்சாலே, எலும்மிச்சை சோறு மாதிரி இருக்கும்னு சொல்லு.

ஆனந்த்: ஆனா, எலும்மிச்சை சோறு ருசி இருக்காது.

விவசாயி: சரி இந்த பிடி கத்திரிக்காயில, எந்த சத்த சேர்த்து இருக்காங்க.

ஆனந்த்: இந்த பிடி கத்திரிக்காயில சத்து ஏதுவும் புதுசா சேக்கிலை. இந்த கத்திரிக்கா ரகத்தோட சிறப்பு, புழு, பூச்சியெல்லாம் இத கடிச்சா செத்திடும். அதனால பூச்சி மருந்து அடிக்க தேவையில்லை.

விவசாயி: அது எப்படி பூச்சி சாவும்?

ஆனந்த்: அங்கேதானே, நம்ப விஞ்ஞானிகள் நிக்கிறாங்க. பேசிலஸ் தூரின்ஜியன்சிஸ் (Bacillus thuringienesis) அப்படிங்ற பாக்டிரியா ஒரு நஞ்சுயை தயாரிக்கும். இந்த நஞ்சு நம்பல, ஆடு, மாடு, மரம், செடியெல்லாம் ஒன்னும் செய்யாது. ஆனா பூச்சிகள மட்டும் சாவடிக்கும். பிடி என்பது பேசிலஸ் தூரின்ஜியன்சிஸ் என்பதன் சுருக்கமாகும். 

விவசாயி: அதிசியமா இருக்கேபா.

ஆனந்த்: விஞ்ஞானிகள், அந்த நச்சுவோட மரபணுவை மட்டும் பிடி பாக்டிரியாவிலிருந்து எடுத்து, கத்திரிக்கா செடியின் மரபணுவுடன் உயிரிதொற்நுட்பத்தை பயன்படுத்தி இணைச்சுடுறாங்க. இந்த செடிகளதான் பிடி பயிர்கள்னு சொல்றாங்க.

விவசாயி: அப்ப நல்லதுதானே, பூச்சிகள் தொல்லையில்ல, பூச்சி மருந்து செலவு இல்லை. அப்புறம் எதுக்கு வேண்டாம்னு கத்துறாங்க?

ஆனந்த்: அண்ணே, சொல்றதுக்கு, கேக்கிறதுக்கு நல்லாதான் இருக்கும். ஆனா இதுக்கு பின்னாடி பல ஆபத்துக்கள் இருக்கு.

விவசாயி: இதுல என்னடா ஆபத்து?

ஆனந்த்: இந்த விவகாரம் உலக அரசியலும், வியாபரமும் சேர்ந்தது. எல்லாம் விவரமா சொல்றேன் கேளுங்க.

விவசாயி: சொல்லுப்பா

ஆனந்த்: இந்த உலகமென்பது உயிர்கள் என்னும் மலர்களை கொண்டு நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் வானம் என்கிற ஐம்பூதங்களால் தொடுக்கப்பட்ட ஒரு கதம்ப மாலை. அதனால எல்லா உயிர்களும் ஒன்னோடு ஒன்னு பினைக்கப்பட்ட்து. எந்த ஒர் உயிரையும் அழித்துவிட்டு, பிற உயிர்கள் வாழ்ந்துவிட முடியாது அண்ணே!

விவசாயி: ஆமாம் உண்மைதான்!

ஆனந்த்: பூச்சிகளில் நிறைய நல்லது செய்கிற பூச்சிகளும் இருக்கு. குறிப்பா பட்டாம்பூச்சி, தட்டான் மாதிரியான பூச்சிகள், தாவரத்தோட மகரந்த சேர்கைக்கு ரொம்ப அவசியம். அது மட்டும் இல்லாம தேன் உற்பத்தி போன்ற விவசாயம் சார்ந்த பிற தொழிகளும் பாதிக்கப்படும்.

விவசாயி: ஆமாமில்ல

ஆனந்த்: சரி, இதுலெல்லாம் கூட ஏத்துகெல்லாம், ஆனா இன்னும் நிறைய பிரச்சனைகள்யில்ல இருக்கு.

விவசாயி: என்ன பிரச்சனை?

ஆனந்த்: அண்ணே! இந்த மரமணு மாற்றப்பட்ட பயிர்கள், நம் உடம்புக்கு நல்லது, எந்த பிரச்சனையும் வராது அப்படினு, இது வரைக்கும் உறுதி செய்யபடவில்லை. அதனால ஐரோப்ப நாடுகள், ஜப்பான் போன்ற விஞ்ஞானத்தில் முதலிடத்தில் இருப்பவர்கள் எல்லாம் இந்த பயிர்களுக்கு தடை செய்துவிட்டார்கள். ஆனால் அமெரிக்கா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவிலுள்ள மான்சான்டோ போன்ற வியாபார நிறுவனங்கள் அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து தயாரித்து உலகிலுள்ள ஏழை நாடுகளுக்கு விற்கிறார்கள். பல நேரங்கள் ஆப்ரிக்க, ஆசிய ஏழை மக்களை, ஆய்வு எலியைப் போல் அவர்கள் மீது பரிசோதிக்கும் கொடுமையும் நடக்கிறது.

விவசாயி: அட பாவிகளா!

ஆனந்த்: நம்ப ஊர்ல பல எதிர்ப்புகளுக்கு மத்தியில 2002 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் பிடி பருத்தி பயிருக்கு அனுமதி கொடுத்தது. குறிப்பா ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் அதிகம் பயிரிடப்பட்டது. பருத்தி சாப்பிடும் பயிரில்லை என்பதால் எந்த ஆபத்துமில்லை என்று சாக்கு சொல்லப்பட்டது. ஒரு முக்கியமான விஷயம், இந்த பிடி பயிர்கள் மகசூலை அதிகரிக்காது. பூச்சி, புழுவை மட்டும் கொல்லும். இந்த பயிர்களின் சாகுபடி நஷ்டத்தால் பல ஆயிரம் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்.

விவசாயி: அட பாவமே!

ஆனந்த: அது மட்டுமில்லாம இந்த பருத்தி செடியோட இலைகள், பின்னாக்கை தின்ன ஆடு, மாடு எல்லாம் கூட செத்து போச்சு.

விவசாயி: ஆனா நீ சொன்ன அந்த பிடி நஞ்சு, பூச்சியை மட்டும்தான் சாவடிக்கும். நம்பல, ஆடு, மாடு, பயிரெல்லாம் ஒன்னும் செய்யாதுனு.

ஆனந்த்: இது விஞ்ஞான ஆய்வு படி உண்மைதான். ஆனா, இந்த ஆய்வு என்பது, ஒர் பூட்டிய கண்ணாடி அறைக்குள், ஒரே மாதிரி வெயில், சுத்தமான மண்ணுல, நல்ல தண்ணியில வளர்த்து பார்த்து சொல்லுவாங்க. இந்த ஆராய்ச்சி சாதரணமா, நம்ப நிலத்தில உள்ளது மாதிரி லட்ச கணக்கான பாக்டிரியா, பிற உயிர்களின் இடைஞ்சல்கள், வெயில், மழை மாற்றங்கள் இல்லாமல் முடிவு செய்தது.

விவசாயி: அது எதுக்கு அப்படி செய்றாங்க.

ஆனந்த்: அதுக்கு ஒரு நியாமான காரணம் இருக்கு அண்ணே! இதுமாதிரி கட்டுபடுத்தப்பட்ட சூழ்நிலையா இல்லையினா, ஏதாச்சும் வித்தியாசமா நடந்தா, புதுசா சேர்த்த மரபணுனாலயா? இல்லை வேற எதாச்சும் காரணமான்னு தெரியாதுல, அதுனாலதான். இருந்தாலும் இந்த சோதனைக்கு அப்புறம், இயற்கையில உள்ள நிலம் மாதிரி, வெயில், மழையெல்லம் உள்ளதுபோல், ஒரு குட்டி மாதிரி செய்து பரிசோதிக்கனும், ஆனா இத எங்க விஞ்ஞானிக பெரும்பாலும் செய்றதில்ல. இப்டி தானே, 1950 தாலிடொமைட் (Thalidomide) அப்டிங்கிற ஒரு மருந்துக்கு எலியில ஆராய்ச்சி செய்து, இதுனால எந்த பிரச்சனையும் வராதுன்னு அனுமதி கொடுத்து, வித்தாங்க. ஆனா இந்த மருந்த சாப்பிட்ட பொண்ணுங்களுக்கு எல்லாம் குறைப் பிரவசவும், முழுசா வளர்ச்சியில்லா குழந்தைகளா பொறந்துச்சு. இதுக்கு காரணம் அந்த விஞ்ஞானிக சாதரண எலிக்கு அந்த மருந்த கொடுத்து பார்த்தாங்க, ஆனா கர்பமா உள்ள எலிக்கு அத கொடுக்குல.

விவசாயி: அய்யோ!

ஆனந்த்: இதுகெல்லாம் மேல இன்னொரு முக்கிய விஷயமிருக்கு, அது evolutionனு சொல்கிற பரிணாம வளர்ச்சி.

விவசாயி: அது என்னப்பா?

ஆனந்த்: எந்த உயிருமே தன்னை கொல்ல ஒன்னு வருதுன்னா, அத எதிர்த்து சண்ட போடும். அதே மாதிரி புழு, பூச்சிகள் கூட எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும். அது மாதிரி பல பூச்சிகளின் பிடி எதிர்ப்பு சக்தி வளர்ச்சி நிருபிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில மான்சாண்டோ நிறுவனமே, அதை ஒத்துகிட்டாங்க. அவங்க அறிக்கையில் சொல்றாங்ககுஜராத்தில் நடத்தின ஆய்வுகளில், இளஞ்சிவப்பு புழுக்களை எதிர்த்து வளரும் சக்தியை பி.டி. பருத்தி விதைகள் இழந்துவிட்டன. அதனால எங்களோட பி.டி. பருத்தியில் 2-வது ரகத்தை வாங்குங்கஅப்டினு.

விவசாயி: இது எத்தன நாளைக்கு.

ஆனந்த்: அது தானே, எற்கனவே அனுமதிச்ச பருத்தியில இவ்வளவு பிரச்சனைகள வச்சுகிட்டு அத சரி செய்யும் வேலைய பார்க்காம, அடுத்தது கத்திரிக்காய்க்கு போய்ட்டாங்க.

விவசாயி: இவ்வளவு ஆபத்து இருக்கா?

ஆனந்த்: ஆபத்து மட்டுமில்ல சூழ்ச்சியும் இருக்கு?

விவசாயி: சூழ்ச்சியா?

ஆனந்த்: இப்ப அவங்கக்கிட்ட இருந்து விதை வாங்கி, சாகுபடி பண்ணிட்டு, மீண்டும் அடுத்த விளைச்சலுக்கு விதைக்கு காசுகொடுத்து வாங்கனும்.

விவசாயி: ஏன்? நம்ப விளைசலில் இருந்ததே விதை எடுத்து கொள்ளலாமில்ல?

ஆனந்த்: அதுதானே அவங்க சூழ்ச்சியும், தந்திரமும். நீங்க சாகுபடி செஞ்ச விதை மீண்டும் முளைக்காது. மறுபடியும் காசு கொடுத்துதான் வாங்கனும்.

விவசாயி: என்ன கொடுமைப்பா இது? விதை நெல்லுதான் எங்களுக்கு சொத்துமாதிரி.

ஆனந்த்: அதுமட்டுமில்ல அண்ணே! சரி இன்னைக்கு எந்த பிரச்சனையும் இல்லனாலும், நாளைக்கு இதுனால நம்ப நிலத்துக்கும், இந்த பூமிக்கும் என்ன நடக்கும்னு யாரு கண்டா? நம்ப சந்ததியெல்லாம் நல்லாயிருக்கனும் இல்ல?

விவசாயி: ஆமாம்ப்பா

ஆனந்த: பல பேர், இந்த மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் தான், உலகத்தின் கோடி கணக்கான மக்களின் பசி மற்றும் வறுமையை போக்க முடியுங்கிற மாதிரி பேசுவாங்க. ஆனா, FAO என்று அழைக்கபடும் ஐக்கிய நாடுகள் சபையின், உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பின் அறிக்கையின்படி, உலக மக்களின் பசியை போக்கிட, மாற்று மரபணு பயிர்கள் தேவையில்லைனு சொல்லியிருக்காங்க. இயற்கை பயிர்களை கொண்டு, பாரம்பரிய முறைபடி விவசாயம் செய்தாலே, இந்த அண்டத்தின் பல கோடி மக்களின் வயிற்றை நிரப்பிவிடலாம்.

விவசாயி: இப்போ கடைசியா நம்ப அரசாங்கம் என்ன சொல்லியிருக்கு?

ஆனந்த்: எல்லாம் தந்திரம்தான் அண்ணே! நிறைய பேர் போராட்டம்
அதுஇதுன்னு நடத்துனதால, இப்போதைக்கு நிறுத்தி வைக்கிறோம்னு சொல்லியிருக்காய்ங்க. கவனிச்சிங்களா இப்போதைக்கு. நாளைக்கு ஏதாவது காவிரி தண்ணி, தீவரவாதிகள் அப்டின்னு பெரிசா பிரச்சனைகள் வரும்போது, அந்த நேரத்தில சத்தமே இல்லாம அனுமதி கொடுத்துவிடுவாங்க.

விவசாயி: அட பாவிகளா! சரி அதவிடு, நம்ப நிலத்தில நல்ல மகசூல் பார்க்கிறது எப்படின்னு சொல்லு?

ஆனந்த்: இதுக்கு ஒரே வழிதான் அண்ணே! அது நம்ப காலம், காலமா செய்ற இயற்கை விவசாயம் தான். இந்த கேமிக்கல் உரம், பூச்சி மருந்து எல்லாம் இல்லாமா, அந்த காலத்துல நம்ப தாத்தா, பாட்டியெல்லாம் செஞ்ச மாதிரி செய்யனும்.

விவசாயி: இது முடியுமான்னு தெரியல எனக்கு, நல்ல மகசூல் கிடைக்குமான்னு பயமா இருக்கே?

ஆனந்த்: பயப்பிடாதீங்க அண்ணே! கேமிக்கல் உரத்தவிட, இயற்கை உரம் பயன்படுத்தினா கூடுதல் மகசூல் கிடைக்கும் நம்ப ஊரிலைய கண்டுபிடிச்சு இருக்காங்க.

விவசாயி: அப்படியா, அப்ப செய்து பார்க்கிறேன். பல விஷயத்த ரொம்ப பொறுமையா சொன்னப்பா, ரொம்ப நன்றி.

ஆனந்த்: இது என்ன அண்ணே, நமக்குள்ளே நன்றியெல்லாம். இது என் கடமை. சரி நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் அண்ணே!

விவசாயி: சரி பாப்போம்! அடிக்கடி இந்த பக்கம் வந்துவிட்டு போ!

(இந்த நாடகத்தை எழுத என்னை ஊக்குவித்த கார்த்திக், திரு. ஆக்கம் சங்கர், எனது ஆசிரியர் திரு. சண்முகம் ஆகியோர்களை குறிப்பிட விருப்புகிறேன்)